Friday, April 22, 2016

நாகை தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒன்றுக்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள், இன்னும் சொல்லப் போனால் நாகூரை சேர்ந்தவர்கள் பிரதான கட்சிகளின் ஆதரவுடன் களம் இறங்கி உள்ளார்கள். இதற்கு முன், நம் தலைமுறையினர் தெரிந்த வரையில், நிஜாமுதீன் மட்டுமே நாகூரை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் எந்த அளவுக்கு நாகூர் முன்னேற்றத்துக்கு செயல் பட்டுள்ளார் என்பது தெரியாது. இருந்தாலும் பரவலாக அவர் செய்திருக்கலாம்.
ஆனால், நம் தலைமுறையினர் அறிந்த வரையில் நாகூர், நாகை பகுதிகள் எந்த முனேற்றமும்  அடைந்ததற்கான அறிகுறிகள் இல்லை. நாகை மாவட்டமும் சரி, நாகை-நாகூர்  பகுதியும் சரி பிற்படுத்தப்பட்ட பகுதியாகவே இன்று வரை இருக்கிறது. இவ்வளவு காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம். எல். ஏக்கள் ஓன்று கம்யூனிஷ்டு இல்லாவிட்டால் மீனவ சமூகம் என்று இருந்ததனால் அவர்கள் தங்களுடைய செல்வாக்கை அதிலேயே செயல் படுத்துபவர்களாகவே இருந்துள்ளனர். இதில் தற்போதைய அமைச்சரான ஜெயபாலும்  அடக்கம்.
நாகூர் மக்களை பொருத்தவரை இந்த தேர்தலை சமுதாய மற்றும் நகர முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பமாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
நமதூரைப் பொறுத்த வரை என்றும் சவலைப் பிள்ளையாகவே இருக்கிறது.  சமூக பெருந்தகைகளோ இளைஞர்களோ அதைப் பற்றி எந்த கவலையும்  படுவதில்லை.
நாகூரின் பெயர் படிப்படியாக அரசு ஆவணங்களில் இருந்தும், இன்னும் நெடுஞ்சாலை மைல் கல்லிலும் கூட காணாமல் சென்றுக்  கொண்டிருக்கிறது.
குறைந்த பட்சம் ஒரு மக்கள் தொகை நகரமாகக் (census town) கூட அங்கீகரிக்கப் படவில்லை. நாகூர் காவல் சரகம் கூட கலைக்கப் பட்டு நாகப்பட்டினம் சரகத்தோடு இனைக்கப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். நாகை நகராட்சியின் கீழ் இருக்கும் வரை நாகூர் முன்னேற வழி இல்லை என்பது என்னைப் போன்றோரின் கருத்து.
எலி வலை ஆனாலும் தனி வலை என்பது போல் ஒரு சமுதாயமோ நகரமோ முன்னேற  வேண்டுமென்றால் அது தனது சொந்த மக்களால் ஆளக் கூடிய சுயாட்சி பெற்று இருக்க வேண்டும், அது சிறு கிராமமாக இருந்தாலும் சரியே.  திட்டச்சேரி,வேளாங்கண்ணி, கீழ் வேளூர் போன்ற சிற்றூர்களே அரசு கெஜட்களில் இருக்கும்போது நாகூர் முழுமையாக தன்னை இழந்து நிற்பது வருத்தமான் விஷயம். இதற்கிடையில் இவ்வூருக்கு சுற்றுலா தலம் என்ற பெயர் வேறு.
ஊரார் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இன்னும் சிறிது காலத்தில் சார் பதிவாளர் அலுவலகம், ரயில் நிலையம் கூட அப்புறப்படுத்தப்பட்டு விடும். நாகூர் railway terminal அந்தஸ்து கூட காரைக்காலுக்கு சென்று வருடங்கள் ஆகி விட்டன.
நாகை நகராட்சியின் அதிக வருவாய் பெரும் பகுதியாக இருந்தும் முனிசிபாளலிட்டியில் நாகை பகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் தான் அதிகம். Vice President ஹாஜி  காகாவிடம் கூட இதைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.

நாகூரை பொருத்தவரை இந்த தேர்தலில் எந்த வேட்பாளர் கீழ் கண்ட உறுதி அளிக்கிறாரோ அல்லது தகுதி பெறுகிறாரோ அவரை தேர்ந்தெடுங்கள். 

1. வேட்பாளர் மண்ணின் மைந்தனா; அவர் இது வரை ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதவரா?

2. தற்போது முஸ்லிம் வேட்பாளர்களாக இருந்தாலும் அவர்கள் பிரதான கட்சியை சார்ந்தவராக இல்லாதவராகையால் நிச்சயமாக ஆட்சிக்கு வரும் கட்சி திமுகவோ அதிமுகவோ எதுவாக இருந்தாலும் அவை அறுதிப் பெரும்பான்மை பெரும் பட்சத்தில் நாகை MLA தனித்து விடப் படுவது நிச்சயம். அதனால், போட்டிடும் வேட்பாளர் ஆட்சிக்கு வரும் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவாரா  என்பதை பார்க்க வேண்டும்.

3. MARG துறைமுக விஷயத்திலும், நாகூர் jetty development விஷயத்திலும் அவரது நிலை என்ன? அவர் என்ன உறுதி அளிக்கிறார்?

4. சமுதாயத்தின் ஒற்றுமைக்காக பாடுபடும் குணம் உள்ளவரா அல்லது அலட்டல் பேர்வழியா?

5. நாகூர் முன்னேற்றதுக்கான அவரது செயல் திட்டம் என்ன? கட்டமைப்பு வசதிகள் பற்றிய அவரது பார்வை என்ன?

6.முழு தொகுதியின் தொழில் வளர்சிக்கான அவரது திட்டம் என்ன? நாகூர் பகுதியின் தொழில் வளர்ச்சிக்கான உறுதி என்ன?

7. நாகூரை தன்னாட்சிக்குட்பட்ட நகராட்சியாகவோ (நகரமைப்பு சட்டப்படி மாக்கள் தொகை குறைந்த பட்சம் 25000 இருக்க வேண்டும்), இல்லை பெரூராட்சியாகவோ ஆக்குவதற்கு பாடுபடுவார?

8.நாகூரை மீண்டும் காவல் சரகமாக்குவாரா?

9. முஸ்லிம், மீனவர் மற்றும் விவசாயிகளாகிய பிற்படுத்தப்படவர்களுக்காக  குரல் கொடுப்பார? சட்ட சபையில் திட்டம் கொண்டு வருவாரா?

இவை எல்லாம் செய்வதற்கு யார் முன்வருகிராரோ அவரையே தேர்ந்தெடுங்கள். நாகூரின்  தனிப் பெயரை மீண்டும் கொண்டு வாருங்கள்.

பதவி மட்டுமே குறி கொண்டு வருபவர்களை அவர்கள் உங்கள் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவரை புறக்கணியுங்கள்.
நீண்ட காலங்களுக்கு பிறகு நமது  நாகூர்  வட்டார மக்களுக்கு கிடைத்துள்ள அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.
உழைப்பும் துஆவும் இருந்ததால் மீதமுள்ளவற்றை இறைவன் நாடினால் அவன் பார்த்துக் கொள்வான்.

நன்றி.
அபூ ஷாகிர் .




தமிழில் டைப் செய்ய: