Saturday, August 8, 2009

பகுதி-16: உயிருக்கு பயந்தோ, சுய விருப்பமின்றியோ இஸ்லாத்தை ஏற்பது பற்றி:

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிடம் ஒரு பொருளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நானும் அங்கு அமர்ந்திருந்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், நான் மிகவும் அறிந்திருந்த ஒருவருக்கு கொடுக்காமல் விட்டு விட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் அவரை உண்மையான விசுவாசியாக கருதுகிறேன்" என்றேன். நபி (ஸல்), "அல்லது ஒரு சாதாரண முஸ்லீம்" என்று கூறினார்கள். நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். இருந்தாலும், நான் அந்த மனிதரைப் பற்றி மிகவும் அறிந்திருந்ததால், நபியிடம் என்னையும் மீறி திரும்பவும் கேட்டேன். பின்னர், அல்லாஹ்வின் தூதரிடம், "அந்த மனிதரை ஏன் விட்டு விட்டீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர் உண்மையான விசுவாசி" என்றேன். நபி (ஸல்), "அல்லது ஒரு சாதாரண முஸ்லீம்" என்று மீண்டும் கூறினார்கள். அந்த மனிதரைப் பற்றி நான் அறிந்திருந்ததால் என்னால் மீண்டும் அதே கேள்வியை கேட்காமல் இருக்கமுடியவில்லை. அதன் பின்னர் நபி (ஸல்) கூறினார்கள், "சஅதே, மற்றொருவர் எனக்கு நேசமிக்கவராக இருப்பினும்,(அவருக்குக் கொடுக்காமல்), வேறு ஒருவருக்கு, அவர் அல்லாஹ்வால்நரகத்தில் குப்புற வீசப்பட்டு விடுவாரோ என்று பயப்படுவதால் கொடுக்கிறேன்" என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:26)

குறிப்பு: அந்த மனிதர் கொடுக்கப்படாவிட்டால், ஏதேனும் குற்றமிழைத்து நரகில் வீசப்பட்டு விடுவாரோ என்று பயந்ததால், 'அத் (ரலி) குறிப்பிட்ட இந்த மனிதருக்கு கொடுக்காமல் அந்த மற்றொரு மனிதருக்கு நபி(ஸல்) கொடுத்தார்கள்.
மன்னிக்கவும். மொழி பெயர்ப்பு இந்த இடத்தில் சரியாக வரவில்லை. யாராவது திருத்திக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன், இன்ஷா அல்லாஹ்.

In English:
............ Then the Prophet (PBUH) said, "O Sa'ad, I give to a person while another is dearer to me, fearing that he might be thrown on his face in the fire by Allah"

Friday, August 7, 2009

பகுதி:15 - ஈமான் என்றாலே நற்செயல் என சிலர் வாதிடுகின்றனர்

அபு ஹுரைரா (ரலி) அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "செயல்களில் சிறந்தது எது?" என கேட்கப்பட்டதற்கு, அவர்கள், "அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (முஹம்மது [ஸல்]) மீதும் விசுவாசம் கொள்வது" என்று பதிலளித்தார்கள்.
கேள்வியாளர் மீண்டும், "(நற்செயல்களில்) அடுத்தது எது?" என்று கேட்டார். நபியவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது" என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் மீண்டும், "(நற்செயல்களில்) அடுத்தது எது?" எனக் கேட்டார். நபியவர்கள், "மப்ரூரான ஹஜ் செய்தல்" (அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடி, மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக அல்லாமல் செய்யப்பட்ட ஹஜ். மேலும், பாவங்கள் எதிலும் ஈடுபடாமல், நபி வழியில் சரியான பேணுதலுடன் செய்யப்பட்ட ஹஜ்) என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:25)

Thursday, August 6, 2009

பகுதி:14 - இறைநம்பிக்கை

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
"மனிதர்களில், வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என உறுதியளித்து, தொழுகையை ஒழுங்காக நிலை நாட்டி, ஜகாத்தையும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுமாறு நான் (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆகவே, அவ்வாறு அவர்கள் செய்தால், அவர்களின் உயிர், உடமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்; இஸ்லாமிய சட்டங்களை தவிர (இஸ்லாமிய சட்டங்களில் வரம்பு மீறினால் ஒழிய). மேலும், அவர்களது விசாரணை (கணக்குகள்) அல்லாஹ்விடமே உள்ளது." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:24)

Wednesday, August 5, 2009

பகுதி-13: அல்-ஹயா ஈமானின் ஒரு பகுதி

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தெருவில் சென்றுக் கொண்டிருக்கும்போது அன்சாரி (மனிதர்) ஒருவர் தன் சகோதரரை அல்-ஹயா (அதிகமாக வெட்கப்படுவது) சம்பந்தமாக கண்டித்துக் கொண்டிருப்பதை கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அல்-ஹயா ஈமானின் ஒரு பகுதியாய் இருப்பதால் அவரை விட்டுவிடுங்கள்." என்று கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:23)

அல்-ஹயா என்ற இவ்வார்த்தை பெரும்பான்மையான அளவில் நற்குணங்களை குறிப்பதாகும். சுய மரியாதை, அடக்கம், வெட்கம், கண்ணியமான நடத்தை போன்றவை சில உதாரணங்களாகும்

Tuesday, August 4, 2009

பகுதி:12 - விசுவாசிகளின் ஏற்றத் தாழ்வு நிலைகள் அவர்களின் நன்மைகளை பொறுத்ததே - 2

(அபூ சஈத்-அல்-குத்ரி (ரலி)) அறிவித்தார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது (கனவில்) சில மனிதர்கள் சட்டைகளை அணிவிக்கப்பட்டவர்களாக என்முன் எடுத்துக் காட்டப்பட்டனர். அவர்களில் சிலரது சட்டை அவர்களது மார்பளவுக்கு மட்டும் இருந்தது. மேலும், சிலரது சட்டை அதற்கும் சிறியதாக இருந்தது. உமர் பின் கத்தாப் (ரலி) (தரையில்) இழுபடும் அளவு நீண்ட சட்டையை அணிந்தவராக என்னிடம் காட்டப்பட்டார்." என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே, அதற்கு தாங்கள் எப்படி விளக்கமளிக்கிறீர்கள்?" என்று கேட்டனர். நபி (ஸல்), "அது மார்க்கம்" என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:22)

குறிப்பு: அதாவது, அந்த சட்டை என்பது மார்க்கம் என்று பதிலளித்தார்கள்.

Monday, August 3, 2009

பகுதி:12 - விசுவாசிகளின் ஏற்றத் தாழ்வு நிலைகள் அவர்களின் நன்மைகளை பொறுத்ததே - 1

"சுவர்க்கவாதிகள் சுவனத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் புகும்போது கடுகளவேனும் இறைநம்பிக்கை கொண்டோரை நரகத்திலிருந்து வெளியேற்றும்படி அல்லாஹ் கட்டளையிடுவான். அதனால், அவர்கள் நரகிலிருந்து வெளியே எடுக்கப்படுவார்கள். ஆனால், அந்நேரம் அவர்கள் (கருகி) கருத்து இருப்பார்கள். பின்னர், அவர்கள் ஹயா அல்லது ஹயாத் (உயிர்) (அறிவிப்பாளர் எது சரியான வார்த்தை என்பதில் சந்தேகம் கொண்டுள்ளார்) என்ற நதியில் போடப்படுவர். அதனால் அவர்கள் உணவுக்கான நீரோடையின் கரைகளில் முளைக்கும் தானியத்தைப் போல பொலிவு பெறுவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக வருவதை நீங்கள் பார்த்ததில்லையா?" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சஈதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:21)

Sunday, August 2, 2009

பகுதி-11: நான் உங்கள் அனைவரையும் விட அல்லாஹ்வை மிக அதிகமாக அறிந்தவன் என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் கூற்று

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு நல்ல காரியங்களை கட்டளையிடும்போது. அவர்களால் எந்த காரியத்தை இலகுவாக செய்ய முடியுமோ அதை (அவரவர்களின் சக்திக்குத் தகுந்தவாறு) மட்டுமே கட்டளையிடுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) , "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் உங்களைப் போலல்ல. (எங்கள் நிலை தங்களுடையதை போன்றதன்று) அல்லாஹ் உங்களது முன் பின் பாவங்களை மன்னித்து விட்டான்." என்று கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்து விட்டார்கள். அந்த கோபம் அவர்களின் முகத்தில் தெரிந்து. பின்னர், நபி (ஸல்) கூறினார்கள், "நான் அல்லாஹ்வை மிகவும் அஞ்சுபவனாகவும், அல்லாஹ்வை உங்கள் அனைவரையும் விட மிகவும் அறிந்தவனாகவும் இருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:19)

தமிழில் டைப் செய்ய: